கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் விற்கப்படும் மானியமில்லா சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர உணவகங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மானியமில்லாத விற்பனை சிலிண்டர்களையே பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் பெருநகரங்களில் விற்கப்படும் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்த இண்டேன் கேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் தற்போதைய விலையுடன் ரூ.147 விலை உயர்ந்து ரூ.881 க்கு விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போல கொல்கத்தாவில் 149 ரூபாயும், மும்பையில் 145 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்கள், தேனீர் விடுதிகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள் முதற்கொண்டு மானியமில்லா கேஸ் சிலிண்டரைதான் உபயோகிக்க வேண்டி இருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் சிறு உணவகங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றத்தை சரிக்கட்ட உணவின் விலையை அதிகரிக்க வேண்டி வரலாம் என்றும் உணவக சங்கங்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.