தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில், ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டதாகவும், இதுவரை 2 முறை விசாரணைக்கு வந்துள்ள நிலையில், மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் மீது பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கு, பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசிய வழக்கு, கஞ்சா வைத்திருந்த வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் தன் மீது உள்ள அனைத்து வழக்குகளில் ஜாமீன் பெற்றால் மட்டுமே வெளியே வர முடியும் என்ற நிலையில் கஞ்சா வைத்து இருந்ததாக பதிவு செய்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் இதே வழக்கிற்காக அவர் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை அவர் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இதனை அடுத்து சவுக்கு சங்கர் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.