சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
தற்போது தை மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 6ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் தொடர் மலை பெய்து வருகின்றது. அதனால் மலையேற்ற பாதை மலையேற உகந்ததாக இருக்காது என்பதாலும், மலைப்பகுதி சிற்றோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலும் இன்றும், நாளையும் பக்தர்கள் மலையேற அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் மழையின் அளவை பொறுத்தே அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.