அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்!

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:54 IST)
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் சற்று முன்னர் இணைந்ததை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அதிரடியாக நீக்கப்படுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.


 
 
அதிமுக அணிகள் இணைப்பு இன்று நடைபெறும் என காலையில் இருந்தே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஓபிஎஸ் தரப்பிலும், ஈபிஎஸ் தரப்பிலும் அமைச்சர்கள் மாறி மாறி இன்று உச்சக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து விரைவில் ஓபிஎஸ் அணி இணையும் என கூறப்பட்ட நிலையில் திடீரென சற்று தாமதம் ஏற்பட்டது. அணிகள் இணைவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதன் பின்னர் தான் அணிகள் இணையும் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி ஓபிஎஸ் அணியை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் அணியினர் சென்றனர். அதன் பின்னர் அதிமுக இரு அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. ஓபிஎஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைக்குலுக்கு இணைப்பை வெளிப்படுத்தினார்.
 
அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்பட்டார். ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பர் என கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் தற்போது துணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான வைத்திலிங்கம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
ஓபிஎஸ் அணியின் முக்கிய கோரிக்கையான சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளார் பதவியிலிருந்து நீக்க உள்ளதாக அதிரடியாக கூறினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நாளை வேலை நிறுத்த போரட்டம்: வங்கிகள் திட்டவட்டம்!!