Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகள்: சசிகலா கண்டனம்..!

நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகள்: சசிகலா கண்டனம்..!
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (18:01 IST)
நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை திறக்காமல் பூட்டி வைத்து இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
 
கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ரேஷன் கடைகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்படாமல் பூட்டி வைத்துள்ளதாக தெரியவருகிறது. ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசி, பருப்பு சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை நம்பி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் பெரும்பாலான பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இன்றைக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பசியோடும், பட்டினியோடும் தவிப்பதாக சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு இன்றைய திமுக தலைமையிலான அரசே காரணம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் திமுக தலைமையிலான அரசு இவ்வாறு உறக்கத்திலேயே இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிலும், நீலகிரி போன்ற மலைப்பிரதேசப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை நினைத்தபோதெல்லாம் சென்று வாங்கிவிடமுடியாத சூழலில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னுரிமை அளித்து அங்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்து மக்களுக்கு சிரமமின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். ஆனால் திமுகவினர் மக்களுக்கு எதை செய்யவேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு தேவையற்ற மதபிரச்னைகளை உண்டுபண்ணுவது ஏன்? என்று புரியவில்லை. ஒருவேளை இதுபோன்று தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகளை மூடி மறைப்பதற்காக திமுகவினர் திட்டமிட்டு வேண்டுமென்றே மதபிரச்னைகளை தூண்டுகிறார்களோ என்ற எண்ணம் அனைவருக்கும் எழுகிறது.
 
எனவே, வாக்களித்த மக்களுக்காக திமுகவினர் கொஞ்சமாவது நன்றியுணர்வோடு செயலாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் பூட்டி கிடக்கும் ரேஷன் கடைகளை உடனே திறக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மலைப்பிரதேசப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதன தர்மம் குறித்து கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்லியுள்ளார்?