தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வென்ற முரளியுடன் சேர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் சென்று சந்தித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுகவில் இருந்த நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் சில ஆண்டுகள் முன்னதாக பாஜகவில் இணைந்தார். பாஜகவில் முக்கியமான பொறுப்புகள் ஏதும் வகிக்காவிட்டாலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவும், திராவிட கட்சிகள் குறித்து விமர்சித்தும் ட்விட்டரில் பதிவுகளை இட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று தமிழக திரைப்பட தயாரிப்பாளர் தேர்தலில் வென்ற முரளி ராம நாராயணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்ற நிலையில் பாஜக எஸ்.வி.சேகரும் அவர்களுடன் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பலவாறாக பேசிக் கொள்ளப்பட்டாலும் முரளி அணி ஆதரவாளர் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலினை சந்திக்க எஸ்.வி.சேகர் சென்றதாகவும் கூறப்படுகிறது.