திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை மிக கேவலமாக விமர்சிக்கும் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து அதற்கு கொச்சையான பதிவு ஒன்றையும் எழுதியிருக்கிறார் எஸ்.வி.சேகர்.
சமீபத்தில் தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் பாகுப்பாட்டோடு சித்தரிக்கும் வகையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பாடங்கள் அமைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று யாரோ ஒரு வினாத்தாள் போன்ற ஒன்றை தயாரித்திருக்கிறார். அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முக ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை தனிப்பட்ட முறையில் கேவலப்படுத்தும் வகையில் வினாக்கள் மற்றும் விடைகளில் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர்.
ஏற்கனவே பெண் பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தும் அவரை கைது செய்யாமல் அரசு அலட்சியம் காட்டியதாக பலர் குறை கூறினார்கள். தற்போது இப்படி மோசமான பதிவுகளை இவர் இட்டிருப்பது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்ப்புகள் ட்விட்டரில் பலமாக எழுந்ததால் அந்த ட்வீட்டை தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் எஸ்.வி.சேகர். இருப்பினும் அதன் ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.