பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா பார்வையாளர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பார்க்கவேண்டும் என்ற சிறை விதிகளை மீறி நடந்துகொண்ட சம்பவம் ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
முன்னதாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சசிகலா மீது பல அதிரடி குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது செல்வாக்கை பயன்படுத்தி சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சிறப்பு வசதிகளை தனக்கென ஏற்படுத்திக்கொண்டதாக ரூபா கூறினார்.
மேலும் சசிகலா சிறை விதிமுறைகளை மீறி பார்வையாளர்களை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சசிகலா மற்றும் அவருடன் சிறையில் இருக்கும் இளவரசி ஆகியோர் வெளியில் ஷாப்பிங் சென்று வரும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சிறை விதியை மீறி பார்வையாளர்களை சந்தித்தது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்டனை பெற்ற கைதிகளை பார்க்க முடியும். ஆனால் அவரது உறவினர் விவேக் அடுத்தடுத்த நாட்கள் சசிகலாவை சந்தித்தது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.