இந்தியாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தவிர பிற அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2020 டிசம்பர் மாதம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து சமூக தன்னார்வலர் ஒருவர் ஆர்டிஐ மூல்மாக தகவல் கேட்டபோது ஜப்பான் நாட்டு நிதி நிறுவனம் மூலம் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே நிதி கோரப்பட்டுள்ளதாகவும், மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசின் நேரடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1264 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இதுவரை 12.35 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிய வந்துள்ளது.