நேற்றும் இன்றும் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பது குறித்த தகவலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில் ஜனவரி 23 மற்றும் ஜனவரி 24 என இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்ற இந்த ஆண்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,00,431 கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு நடந்த இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
முன்னதாக இன்றைய மாநாட்டு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மேலும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தொழிற் துறையினருக்கு என சிறப்பு கருத்தரங்குகளும் முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகளும் நடைபெற்றது.