Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?

பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?
, வியாழன், 24 ஜனவரி 2019 (17:18 IST)
கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் பல்வேறு தரப்பினர் உள்ள நிலையில், சீனா அதுகுறித்து கவலைப்படுவதை போன்று தெரியவில்லை.
சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு காரணமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்ஸிட் உடன்படிக்கை நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட சர்வதேச காரணங்களும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 21ஆம் தேதி தனது பொருளாதார மந்தநிலை குறித்த தரவுகளை வெளியிட்ட சீனா, அவை தான் எதிர்பார்த்திருந்த அளவுக்குள்தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள ஊடகங்கள் இந்த பொருளாதார முடிவுகளிலுள்ள சாதகமான விடயங்களை மட்டும் பெரிதுபடுத்தி காண்பித்து வருகின்றன.


 
2009ஆம் ஆண்டு உலகளவில் நிலவிய பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, முதல் முறையாக 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக குறைந்ததற்கு சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரே காரணமென்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
எண்ணிக்கையை விட தரமே முக்கியம்
 
தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சர்வதேச ஊடகங்கள் எப்படி காட்சிப்படுத்தும் என்று நன்கு அறிந்திருக்கும் சீன ஊடகங்கள், தங்களது நாடு எண்ணிக்கை அடிப்படையிலான வளர்ச்சியை விடுத்து தரத்தை நோக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுவருவதாக கூறுவதுடன் அதை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
 
சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தளவு வளர்ச்சி வீதத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை கேலிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் சீன ஊடகங்கள், தங்களது நாட்டின் 6.6 சதவீத பொருளாதார வளர்ச்சி உலக அரங்கில் சீனாவின் தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது.
 
"கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த உள்நாட்டு உற்பத்தி என்பதை மையாக கொண்டு சீனாவின் பொருளாதார மந்தநிலை பற்றிய செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து, ஆய்வு மேற்கொள்வது சரியானதாக இருந்தாலும், வெறும் வளர்ச்சியை மட்டும் மையாக கொள்ளும் அணுகுமுறை தவறானது" என்று சீனாவின் தேசிய ஆங்கில பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குதல், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றை சீன அரசாங்கம் மேற்கொள்வதன் காரணமாகவே இந்த பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"இதற்கு முன்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனா பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ஏற்கனவே அதிக விலையை கொடுத்ததுடன், அதன் மூலம் கிடைத்த வளர்ச்சி மக்களுக்கு நல்ல, தரம் வாய்ந்த வாழ்க்கையை அளிப்பதற்கு தவறிவிட்டது" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"பொருளாதார மந்தநிலையின் காரணமாக நாடு நெருக்கடி நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால், முக்கியமான பிரச்சனைகளை தீர்க்கவும், அபாயங்களை தவிர்க்கவும், சீரான போக்கையும் நோக்கி செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அர்த்தம் கொள்ள வேண்டும்."
 
சீன அரசு எதிர்பார்த்ததே
 
சீனாவின் பொருளாதார மந்தநிலை குறித்து பல்வேறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், கடைசி காலாண்டின் வளர்ச்சி இதுபோன்ற அளவில்தான் இருக்குமென்று சீன அரசின் மதிப்பீடுகள் ஏற்கனவே கணித்திருந்தன.
 
"2018ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 6.5 சதவீத வளர்ச்சிக்கு அதிகமான அளவையே நாடு எட்டியுள்ளது. கடந்தாண்டு இருந்த பல்வேறு தடைகளையும் மீறி 6.6 சதவீத வளர்ச்சியை அடைந்தது நல்ல அறிகுறியே" என்று அந்நாட்டின் தேசிய புள்ளியில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு என்ன சொல்கிறது?
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'பீபிள்ஸ் டெய்லி' பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளின் மற்றொரு பகுதியை தலைப்பு செய்தியாக்கின. அதாவது, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக 90 ட்ரில்லியன் யுவான்கள் என்ற அளவை கடந்துள்ளதாக செய்தி வெளியிட்டன.
 
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்திருந்தாலும், உலக பொருளாதாரத்திற்கு 30 சதவீத பங்களிப்பை அளித்து உலக அரங்கில் முன்னணி நாடாக தொடர்ந்து வருவதாகவும் அந்நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சீனாவின் பொருளாதாரம் "உலக எதிர்பார்ப்புக்கு உரியதாகும்" என்பதை இந்த பொருளாதார முடிவுகள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி முகமையான சின்குவா தெரிவித்துள்ளது.
 
"சர்வதேச அளவில் உயர்ந்து வரும் பாதுகாப்புவாதத்தின் கடினமான சூழ்நிலைகளிலும், சீனா எதிர்கொண்டு வரும் புதுவகையான சவால்களையும் மீறி இந்த அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சீன பொருளாதாரத்தின் செறிவு, முக்கியத்துவம் மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை கொன்ற கணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...