நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் களம் இறங்கினால் மக்களின் ஓட்டுகள் அவருக்குதான் விழும் என பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராம் கோபால் வர்மா “ ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது எழுந்த சக்தியை இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் அவருக்குதான் வாக்களிப்பார்கள். அவருக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சியும் திக்கு முக்காடிப் போகும்.
அவரைப் போல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணும் அரசியலுக்கு வருவதாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர் கூறவில்லை எனில் ரஜினிகாந்தை போல் அவருக்கு தைரியம் இல்லை எனப் பேசுவார்கள். தெலுங்கு மக்களுக்கு அது அவமரியாதையும் கூட” என அவர் குறிப்பிட்டுள்ளார்.