அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார்.
தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினி, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவர் இன்று சந்திக்கவுள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் ரஜினி. மூத்த அரசியல்வாதி என்கிற முறையில் அவர் மீது மரியாதை கொண்டிருப்பவர். எனவே, அரசியலில் காலெடுத்து வைப்பதற்கு முன் அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாராம்.