ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும் நாட்டுப் படகுகள் சேதமாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடலில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கொஞ்சம் கொஞ்சமாக கடல் நீர் உள் வாங்கியதாகவும் ஒரு கட்டத்தில் 50 மீட்டருக்கு மேல் உள்வாங்கியதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளிலும் அவ்வப்போது திடீர் திடீரென கடல் நீர் உள்வாங்குவதும் அதன் பிறகு சில மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.