தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரை உ.பா. சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
யூடியூப் சேனல் ஒன்றை போலீஸார் கண்காணித்தபோது, அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பல்வேறு வீடியோக்களில் கிலாஃபத் சித்தாந்தம் தொடர்பாக பேசி இருப்பது தெரியவந்தது. இது குறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த யூடியூப் சேனலில், அத்தகைய வீடியோக்களை பேசி பதிவேற்றம் செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் வெளியிடும் வீடியோக்களையும், அவரது நடவடிக்கையையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டை ஜானி ஜஹான்கான் தெருவில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச்சலவை செய்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள்திரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் என்ற உ.பா. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தண்டையார்பேட்டை மற்றும் செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சைபர் க்ரைம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி, காமராஜபுரத்தை சேர்ந்த முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என்கிற ஜாவித் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.