ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆன்மீகவாதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சகமும் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், அறநிலை துறை சார்பாக இலவச ஆன்மீக பயணம் செல்லும் திட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு புதிய ஆன்மீக இலவச பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு செல்லும் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றாலும், இலவசமாகவே தமிழ்நாடு அரசு இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்து அறநிலைய துறை சார்பில் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 200 நபர்கள் அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பயணத்திற்கு 50 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கி இருந்தது. இந்த ஆண்டு தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதால், இந்த ஆண்டு 300 பேரை இலவசமாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மண்டலங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது."