ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடலோர பகுதிகளில் ரூ.15 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்காக தமிழக அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைகளால் சூழப்பட்ட ராமேஸ்வரம் தீவு அருகே கோரி, குருசடை, புள்ளிவாசல், பூமரிச்சான் தீவுகள் மாங்குரோவ் காடுகள் மற்றும் பவளப்பாறைகளால் வளமையாக உள்ளன.
இந்த பகுதியில் லட்சக்கணக்கான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதி சர்வதேச ராம்சர் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், தமிழக சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், ராமேஸ்வரம் தீவில் ரூ.15 கோடியில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் அறிவித்தார். இதற்காக தமிழக அரசு சமீபத்தில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் பவளப்பாறை படகு சவாரி, குருசடை தீவின் சதுப்பு நிலப்பகுதி, தனுஷ்கோடியில் பறவைகள் கண்காணிப்பு மையம், ஆமைகள் விளக்க மையம் மற்றும் கோதண்டராமர் கோயில் பகுதி மேம்பாடு போன்ற பல வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் உள்ளூர் மீனவ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.