நெய்வேலியில் மூன்றாவதாக நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக மக்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26-ம் தேதி நெய்வேலியில் பாமக போராட்டம் நடத்தும் எனஅறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என 3 நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் நிலக்கரியில் தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலக்கரியை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டி வருகிறது. இதை அடுத்து தற்போது சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கம் அமைக்க முடிவு செய்து அதற்காக பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்த உத்தேசித்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதனால் மக்களுக்கு ஆதரவாக பா.ம.க. சார்பில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நெய்வேலியில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘நெய்வேலி eன்.எல்.சி. யின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனெவே 3 சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அதன்மூலம் கிடைக்கும் நிலக்கரியில் குறிப்பிடத்தக்க அளவு வெளி நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சில பத்தாண்டுகளில் என்.எல்.சி நிறுவனம் அதன் மின்சார உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு அதிகரித்தாலும், அதற்குத் தேவையான நிலக்கரியை இப்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் நிலங்களில் இருந்தே பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது சுரங்கம்-3 அமைப்பதற்கான தேவை என்ன?
புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தவுள்ள நிலங்களின் பரப்பு 12,125 ஏக்கர் ஆகும். இந்த நிலங்கள் தான் அப்பகுதிகளில் உள்ள 26 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய இந்த நிலங்களில் இருந்து ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இவ்வளவு வளமான நிலங்கள் நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க நேரிடும்.அதுமட்டுமின்றி ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய மக்களுக்கே இன்னும் இழப்பீடு கொடுக்கப்ப்டவில்லை என்ற நிலையில் இப்போது கையகப்படுத்தும் நிலத்திற்கு முறையான இழப்பீடு கொடுக்கப்படும் என்ற உத்ரவாதமும் இல்லை.’
எனவே நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக பா.ம.க சார்பில் நெய்வேலியில் டிசம்பர் 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.