Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனத்துறை வைத்துள்ள கன்றுகளை பொதுமக்களிடம் கொடுக்கவேண்டும்… ராமதாஸ் அறிவுறுத்தல்!

வனத்துறை வைத்துள்ள கன்றுகளை பொதுமக்களிடம் கொடுக்கவேண்டும்… ராமதாஸ் அறிவுறுத்தல்!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (11:37 IST)

பாமகவின் நிறுவனர் ராமதாஸ் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் விரைந்து கன்றுகளை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமைக் காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. வேளாண் துறையினரின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வனத்துறையினர் வளர்க்கும் மரக்கன்றுகளை வேளாண்துறையினர்தான் பெற்று, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பணியை வேளாண்துறையினர் செய்யாததால் மரக்கன்றுகளைத் தனியார் கூலித் தொழிலாளிகளை வைத்துப் பராமரிப்பது சிரமமாக இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

வனத்துறை வளர்த்து வைத்துள்ள வேங்கை, மகாகனி, பூவரசன் போன்ற மரக்கன்றுகள் விரைவாக வளர்ந்து நிழல் தரக் கூடியவை ஆகும். இவை அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டவை. மரங்களை நட்டு வளர்க்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில், அவற்றை மக்களிடம் வழங்க வேளாண் துறை தாமதிப்பது முறையல்ல.

வனத்துறை வளர்த்து வைத்துள்ள மரக்கன்றுகளை வேளாண் துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண் துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக்கொண்டால் அம்மரக்கன்றுகளைப் பொதுமக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பாமகவும், பசுமைத் தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் – யார் இவர்?