Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதிக்கு பதிலாக அடையாளத்தை அழிக்கும்… தமிழக அரசின் முடிவு குறித்து ராமதாஸ் கருத்து

Advertiesment
தமிழ்நாடு அரசு
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறும் சான்றோர்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால் இது குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முயற்சி சாதிக்குப் பதிலாக அடையாளத்தையே அழிக்கும் எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட ஆசிரியர் பெயராகவும், சான்றோர் வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும். 2021&22 ஆம் கல்வியாண்டில் பயன்படுத்துவதற்காக 2020&ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட பொதுத்தமிழ் பாடநூலின் திருத்தியப் பதிப்பில், பண்டையக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பிலான பாடத்தின் ஆசிரியர் பெயர் உ.வே.சாமிநாதய்யர் என்பதிலிருந்து உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை, தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா என்று தமிழரின் தன்மானத்தை உலகிற்கு உணர்த்திய நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பிள்ளை, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் & தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதிப் பெயர்கள் தமிழ்ப் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை.
தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் சாதி ஒழிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை குறை கூற முடியாது; மாறாக வரவேற்கவும், பாராட்டவும் தான் வேண்டும். அது எட்டப்பட வேண்டிய லட்சியமும் கூட. ஆனால், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். அதற்காகத் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதை விடுத்து பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது.

உ.வே.சா அய்யர், வ.உ.சி பிள்ளை உள்ளிட்டவர்களின் அடையாளங்களையும் அழித்து விடக்கூடாது. சாதாரணமானவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதில் எந்தத் தவறும் இல்லை. சாதனையாளர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் நீடிப்பதை விதிவிலக்காக அனுமதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களை எவரும் சாதிக்காக போற்றவில்லை; சாதனைகளுக்காகவே போற்றுகின்றனர். அதனால், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர் இருப்பதால் சாதி பரவாது. வட இந்தியத் தலைவர்கள் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. அவர்கள் பானர்ஜி, முகர்ஜி, படேல், மோடி, மேனன், சர்மா, வர்மா, சாஸ்திரி என சாதிப் பெயர்களை இப்போதும் வைத்துக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதனால் இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள் தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது. ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பா.ம.க. ஆதரிக்கும் ’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிம் ஜாங் உன்னின் தலையில் காணப்பட்ட பேண்ட் எய்ட்… கிளம்பியது அடுத்த சர்ச்சை!