Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு உடனடியாக தொடங்கப்பட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்!

Advertiesment
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு உடனடியாக தொடங்கப்பட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:41 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படுமா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், நீட் தேர்வு நடைபெற்றால் அதை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இதுவரை தொடங்கப்பட வில்லை.

மற்றொருபுறம் இது குறித்து தெரிவிக்கப்படும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், மருத்துவக் கல்வி கனவில் இருக்கும் மாணவர்களின் குழப்பத்தையும், மன உளைச்சலையும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தேவையிருக்காது. ஆனால், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலே கிடைக்காத நிலையில், அடுத்த கல்வியாண்டில் நீட் விலக்கு சாத்தியமாகுமா என்பது மாணவர்கள் மத்தியில் கவலை தரும் வினாவாக எழுந்திருக்கிறது.

நீட் விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுதான் சரியானதாக இருக்கும். தமிழக அரசும் இதைத்தான் கொள்கை முடிவாக அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அடுத்தக் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், இதுவரை பயிற்சியை தொடங்காதது சரியல்ல.

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், மருத்துவத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ள கருத்துகள் முரணாக உள்ளன. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், ‘‘தமிழ்நாட்டில் நடப்பாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பிறகு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அரசு தொடங்கும்’’ என்று கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘‘தமிழ்நாட்டில் நீட் பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன’’ என்று கூறியுள்ளார். இது குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தமிழக அரசின் சார்பில் நீட், ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான கூட்டு நுழைவுத்தேர்வு ஆகியவற்றுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 80 மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும். இப்போது 12 மாவட்டங்களைச் சேர்ந்த 960 மாணவர்களுக்கு மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளும் ஒன்று அல்ல. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவதைப் போல மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 7 மாதங்களாகி விட்டன. ஏப்ரல் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். நீட் தேர்வும் வரும் ஆண்டில் ஜூனில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராவதற்கான நாட்களை நீக்கினால், நீட் தேர்வுக்கு தயாராக இன்னும் 100 நாட்கள் மட்டும் தான் உள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை எப்போது நடக்கும் என்பதே தெரியவில்லை; அதை அரசு அறிவிக்கவும் இல்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை பிப்ரவரி மாதம் நிறைவடைவதாக வைத்துக் கொண்டால், அதன்பிறகு நீட் பயிற்சி நடத்துவதால் எந்த பயனும் இல்லை. அந்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் தான் மாணவர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர இந்த பயிற்சியில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

தனியார் பள்ளிகளில் பயிலும் பணக்கார மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு நீட் பயிற்சி பெறுகின்றனர். அவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, உயர்தர நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களுடன் 3 மாதம் கூட பயிற்சி பெறாத அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? இது நீட் தேர்வு ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை விட இது மோசமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இதை அனுமதிக்கக் கூடாது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அதுவே போதும் என்ற மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இதுவாகும். அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு தவிர, மீதமுள்ள 92.50% ஒதுக்கீட்டில் குறைந்தது 10% இடங்களையாவது அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றினால் தான் அது உண்மையான சமூக நீதியின் தொடக்கமாக அமையும். அதை மனதில் கொண்டு அரசு திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். அதன் முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹவாய் தீவுகளை வாங்கும் மார்க் ஸுக்கெர்பெர்க்! – என்ன செய்ய போகிறார்?