தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் ஆளுங்கட்சியானால், அவர்கள் ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கிறார்கள் என்று கூறினார் டிடிவி தினகரன்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று இரவு நடைபெற்றது .விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து, விவேக்கிடம் (சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன்) விசாரணை நடத்தப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு, "அவரிடம் தகவல்கள் ஏதாவது இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதை வித்தியாசமாக பார்க்க தேவையில்லை" என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் தாண்டி குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால், தாங்கள் கூறியதை மறந்துவிட்டு ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர்.
இதைத்தான் எதிர்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும்." என்றார்.