Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்வாரியத்தின் கடனுக்கு வட்டி மட்டும் 16000 கோடி ரூபாய்… ராமதாஸ் அறிக்கை!

Advertiesment
மின்வாரியத்தின் கடனுக்கு வட்டி மட்டும் 16000 கோடி ரூபாய்… ராமதாஸ் அறிக்கை!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (14:58 IST)
தமிழகத்தில் மின்சார வாரியம் கடனில் இயங்குவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆந்திர அரசுக்கு சொந்தமான மின் வினியோக நிறுவனங்கள் தான் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மின் நிறுவனங்கள் ஆகும். கடந்த 3 மாதங்களில் ரூ.126 கோடியை மிச்சப்படுத்திய ஆந்திர மின் நிறுவனங்கள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ரூ.2,342 கோடியை மிச்சப்படுத்தியுள்ளன. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4.55க்கு கொள்முதல் செய்யலாம் என ஆந்திர அரசு அனுமதித்துள்ள நிலையில், அம்மாநில மின் வினியோக நிறுவனங்கள் ரூ.3.12க்கு கொள்முதல் செய்கின்றன. இது தான் இந்தியாவில் வெளிச்சந்தையில் மின்சாரத்திற்கு வழங்கப்படும்  மிகக்குறைந்த விலையாகும். ஆந்திர மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை ஒவ்வொரு 15 நிமிடங்கள் வாரியாக செயற்கை நுண்ணறிவுத்திறன் தொழில்நுட்ப உதவியுடன் மின்சார நிறுவனங்கள் கணக்கிடுகின்றன.

வெளிச்சந்தையில் மிக அதிக அளவில் மின்சாரம் விற்பனைக்குத் தயாராக இருப்பதால், அந்த நிறுவனங்களுடன் பேசி குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்குவதால் தான் இவ்வளவு அதிக தொகையை ஆந்திர மின்வினியோக நிறுவனங்களால் மிச்சப்படுத்த முடிகிறது. இதனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அந்த நிறுவனங்கள் இலாபத்தில் இயங்கத் தொடங்கி விடும்.

இந்த விவரங்களைப் பார்க்கும் போது தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போது லாபத்தில் இயங்கும் என்ற ஏக்கம் இயல்பாக எழுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.13,000 கோடி இழப்பை எதிர்கொண்டு வருகிறது. வாரியத்தின் ஒட்டுமொத்தக்கடன் ரூ. 1.59 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு கடந்த 15 ஆண்டுகளாக மிக அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டதும், அதற்கு வசதியாக தமிழ்நாட்டில் அனல் மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் தான். இதை எவரும் மறுக்கவே முடியாது.

தமிழ்நாடு மின் வாரியம் சராசரியாக ஒரு யூனிட் ரூ. 5.02 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது. சில தருணங்களில் அதிகபட்சமாக ரூ.7.00 வரை ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆந்திர மின் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.12க்குத் தான் வாங்குகின்றன. தனியாரிடமிருந்து இவ்வளவு குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்க முடியும் போது, சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் போது அதை விட குறைந்த செலவே ஆகும். ஆனால், தமிழ்நாட்டின் ஓட்டுமொத்த தேவையான 16,000 மெகாவாட்டில் சுமார் 2800 மெகாவாட் அனல் மின்சாரம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவற்றில் மரபுசாரா ஆதாரங்களில் இருந்து பெறப்படும் மின்சாரம் தவிர, மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து சுமார் 5,000 மெகாவாட் அளவுக்கும், தனியாரிடமிருந்து 5000 மெகாவாட் வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அனல் மின்னுற்பத்தித் திறனே 4320 மெகாவாட் மட்டும் தான். இதிலும் கூட 2520 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 12 அலகுகள் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டவை என்பதால் அவை கைவிடப்பட வேண்டும். அத்தகைய சூழலில் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிலிருந்து வாங்க வேண்டிய மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும். அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 1800 மெகாவாட் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 2014 மற்றும் 2019  காலத்தில் மராட்டியமும், குஜராத்தும் தங்களின் அனல் மின்னுற்பத்தித் திறனை முறையே 10,842 மெகாவாட், 6,927 மெகாவாட் ஆக அதிகரித்துக் கொண்டுள்ளன. தமிழகம் மிகவும் பின்தங்கிக் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால்  மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலையை மாற்றி, குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலை உருவாகும். அதன் மூலம் வாரியத்தை லாபத்தில் இயக்கலாம்.

தமிழ்நாட்டில் நிலுவையிலுள்ள மின்திட்டங்கள் உட்பட மொத்தம் 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில்  செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது போதுமானதல்ல.  நிலுவையிலுள்ள 5700 மெகாவாட் மின் திட்டங்களை அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றி முடித்துவிட இயலும். மீதமுள்ள மின் திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்தத் தொடங்கினால் அடுத்த 50 மாதங்களில் செயல்படுத்த இயலும். எனவே, 17,970 மெகாவாட் மின்திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.59 லட்சம்  கோடி  கடனில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு வட்டியாக மட்டும்   ரூ.16,000 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதைக் கொண்டு 1200 மெகாவாட் மின்திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்ய வேண்டும். இதற்கான செயல்திட்டத்தை வகுத்து ஒவ்வொரு ஆறு மாதத்திலும் எத்தனை விழுக்காடு இலக்கு எட்டப்படும் என்பது குறித்த கால அட்டவணையை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இலக்குகள் குறித்த காலத்தில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா மரணங்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்! ஆய்வில் முடிவு!