நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய் கிழமை பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என பேசினார். இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
	
	 
	தமிழக சட்டசபை கடந்த திங்கள் கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். அவர் பெண் சிசுக்கொலையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானவை.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	1992-ஆம் ஆண்டு ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரேசாவே பாராட்டியிருந்தார். மேலும் தமிழக அரசு விரைவில் நீரா பானத்தை பொது விநியோக பயன்பாட்டிற்காக அறிவிக்கவுள்ளது. நீரா பானமும் தாய்ப்பாலும் வெவ்வேறானவை கிடையாது. இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை என பேசினார்.
	 
	இதனை கிண்டல் செய்யும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் - அமைதி, இலக்கியம், அறிவியலுக்கு தான் நோபல் பரிசு உண்டு. ஊழலுக்கு நோபல் பரிசு இல்லையே? என ஒரு டுவிட்டில் கூறியுள்ளார்.
	 
	மேலும் தொட்டில் குழந்தை திட்டத்திற்காக ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: பொள்ளாச்சி ஜெயராமன் - அப்படியானால் ஊழலுக்காக ரூ.100 கோடி தண்டமும், 4 ஆண்டு சிறையும் நீதிமன்றம் விதித்ததே. அதற்கு என்ன விருது வழங்குவது? என கூறியுள்ளார்.
	 
	தனது மற்றொரு டுவிட்டில், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் - இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்பது கூட தெரியாத அறிவாளி. செல்லூர் ராஜுவுக்கு சிறந்த சீடர்! என கிண்டல் செய்துள்ளார் ராமதாஸ்.