திண்டிவனத்தில் இன்று நடந்து வரும் பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், மேடையில் ராமதாஸின் மகள் காந்திமதி அமரவைக்கப்பட்ட சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.
பாமக கட்சியில் நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில காலமாக முரண்பாடுகள் வெடித்த வண்ணம் உள்ளது. ஒருவர் மாற்றி ஒருவர் நிர்வாகிகளை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டு வந்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்குதான் கட்சியில் அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக ராமதாஸ் கூறி வந்தார்.
இன்று பாமக கட்சி செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கவில்லை. ஆனால் அன்புமணியின் சகோதரியும், ராமதாஸின் மகளுமான காந்திமதி இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை ராமதாஸ் ஆதரவாளர்கள் அழைத்து வந்து மேடையில் உள்ள நாற்காலியில் அமர செய்தது அன்புமணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த செயற்குழுவில், கட்சி பதவியை அபகரிக்கும் எண்ணத்தில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவதாகவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்த இந்த சம்பவங்கள் அன்புமணிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ள நிலையில் அன்புமணியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edit by Prasanth.K