Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பால் கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் நிறுவனங்கள்… ராமதாஸ் கண்டனம்!

Advertiesment
பால் கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் நிறுவனங்கள்… ராமதாஸ் கண்டனம்!
, வெள்ளி, 28 மே 2021 (13:13 IST)
கொரோனா கால சூழலைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் விலையைக் குறைத்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :-

தனியார் நிறுவன பால் கொள்முதல் விலை சுரண்டலை தடுக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்திக் கொண்டு பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் கணிசமாக குறைந்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைத்திருப்பது பெரும் சுரண்டலாகும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 17-ஆம் தேதி முதல் ஊரடங்கும், 24-ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்து விட்டது. ஆனால், மருந்து கடைகளும், பால் விற்பனை நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் பால் விற்பனை குறையவில்லை. ஆனால், பால் விற்பனை குறைந்து விட்டதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் குறைத்திருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்காத பசும்பாலை ரூ.18 என்ற விலைக்கு தான் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.32 என்ற விலைக்கும், ஒரு லிட்டர் எருமைப்பாலை ரூ.41 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் எந்த பாலாக இருந்தாலும் 18 ரூபாய்க்கும் மேல் தருவது கிடையாது. இது வழக்கமான கொள்முதல் விலையுடன் ஒப்பிடும் போது 40 விழுக்காடு குறைவு ஆகும்.
தனியார் பால் நிறுவனங்களுக்கென அதிகாரப்பூர்வமாக கொள்முதல் விலை எதுவும் கிடையாது. ஆவின் நிறுவனம் எந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்கு தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்து வந்தன. சில நேரங்களில் தேவை அதிகமாக இருந்தால் ஆவின் நிறுவனத்தை விட கூடுதல் விலை கொடுத்தும் பாலை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இப்போது ஊரடங்கை காரணம் காட்டி பால் விலையை குறைப்பதை விட பெரிய மோசடி இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பாலுக்கான தேவை எந்த வகையிலும் குறையவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் விலையை குறைக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 16-ஆம் தேதி முதல் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, தனியார் பால் விலைகள் கடந்த ஜனவரி மாதத்தில் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டன. தமிழ்நாட்டில் ஆவின் பாலின் அதிகபட்ச விலை லிட்டர் ரூ. 48 மட்டும் தான். ஆனால், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை அதிகபட்சமாக ரூ.64 வரை விற்பனை செய்கின்றன. ஆவின் நிறுவனத்தை விட ஒரு லிட்டர் பாலை ரூ.16 கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.14 குறைப்பது எந்த வகையில் நியாயம்? இந்த அநியாயத்தையும், அற மீறலையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.

கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அண்மைக்காலங்களில் கடுமையாக உயர்ந்து விட்டன. அதனால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்திச் செலவு 30 ரூபாயை நெருங்கி விட்டது. பால் உற்பத்திக்கான மாடுகளை வளர்க்க கிராமப்புறங்களில் பெண்கள் படும்பாடுகளை பட்டியலிட முடியாது. கடந்த இரு ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் விலையும், தனியார் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடாது. நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.
பொதுவாகவே பால் மிக மிக அத்தியாவசியமான உணவுப் பொருள் ஆகும். பால் விற்பனை விலையாக இருந்தாலும், கொள்முதல் விலையாக இருந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை விருப்பம் போல உயர்த்துவதையும், கொள்முதல் விலையை இஷ்டம் போல் குறைப்பதையும் தடுக்க தமிழ்நாட்டில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அதற்கும் முன்பாக தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க ஆட்சியில் இருந்தப்போ ஆக்ஸிஜன் இருப்பு என்ன! – எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!