நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமானவரித் துறையினர் 4 நாட்களாக நடத்திய ஆய்வில் ரூ.65 லட்சம் பணமும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நத்தம் விஸ்வநாதனின் பினாமிகள் குறித்தும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய வைர நிறுவனங்களில் ஒன்றான கீர்த்திலால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திலும் 4 நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் ரூ.2.5 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கரூர் மாவட்ட அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்து தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் கைப்பற்றிய ரூ.5 கோடி பணமும் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது தான் என்றும் வருமானவரித் துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகனிடம் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதால் எந்நேரமும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமாக பினாமி பெயர்களில் இந்தோனேஷியாவில் பத்துக்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களும், அதே எண்ணிக்கையில் சரக்குக் கப்பல்களும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் தமிழக அமைச்சராக இருந்த போது நத்தம் விஸ்வநாதன் ஊழல் மூலம் குவித்த சொத்துக்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. நத்தம் விஸ்வநாதன் இந்த அளவுக்கு சொத்துக்களை குவித்திருப்பது ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை. காரணம், முந்தைய ஆட்சியில் வளம் கொழிக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்து சொத்துக் குவித்தார் என்பதை ஆதாரங்களுடன் நான் அம்பலப்படுத்தி வந்திருக்கிறேன்.
மின்சாரக் கொள்முதலில் நத்தம் விஸ்வநாதனும், முன்னாள் மின்வாரியத் தலைவர் ஞானதேசிகனும் கூட்டணி அமைத்து யூனிட்டுக்கு ரூ.2 வரை கையூட்டு வாங்கியது, மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு வழங்கி ஊழல் செய்தது, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது கொள்முதல் செய்வதில் மது ஆலைகளிடமிருந்து ஒரு பெட்டிக்கு ரூ.60 வரை கையூட்டு பெற்றது என அனைத்து ஊழல்களையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளேன். எனவே, நத்தம் விஸ்வநாதன் குவித்துள்ள சொத்துக்கள் குறித்த தகவல் எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை.
உண்மையில் நத்தம் விஸ்வநாதன் செய்த ஊழல்கள் மற்றும் குவித்த சொத்துக்களின் அளவு முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழலில் எள்முனையளவை விட குறைவானதாகும். உதாரணமாக முந்தைய ஆட்சியில் ஐவரணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர், ஊழல் செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டி ஒப்படைக்கவில்லை என்பதால் மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து இவர்கள் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிமுக மேலிடம் நடத்திய ஆய்வுகளில் ரூ.30,000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 25 ஆம் தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளில் குற்றஞ்சாற்றியிருந்தேன்.
அதை முதல்வர் ஜெயலலிதாவோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ இதுவரை மறுக்கவில்லை. ஆட்சி மேலிடத்தால் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் விஸ்வநாதன் குவித்த சொத்துக்களின் மதிப்பு இவ்வளவு என்றால், அவர் மொத்தமாக குவித்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? மற்ற அமைச்சர்கள் குவித்த சொத்துக்கள் எவ்வளவு? அவர்களுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தமாக நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு? என்பதை நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது.
விஸ்வநாதன் மற்றும் அவரது பினாமிகள் வீடுகளில் வருமானவரித் துறை ஆய்வு நடத்தியிருப்பதால் அவர் மட்டும் தான் ஊழல் செய்தார் என்றோ, மற்ற அமைச்சர்கள் அனைவரும் உத்தமர்கள் என்றோ பொருளல்ல. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த முறை இடம் பெற்றிருந்த அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகள் தான். இப்போதைய அமைச்சரவையில் இருப்பவர்களும் ஊழல்வாதிகள் தான். நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு நடப்பதை அறிந்ததும் அவரைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதன் மூலம் ஜெயலலிதா நேர்மையான தலைவராகி விட மாட்டார்.
அனைத்து ஊழல்களும் அவருக்குத் தெரிந்து தான் நடந்தன. ஊழல் செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்பதற்காக மூத்த அமைச்சர்களின் வீடுகளுக்கு தனிப்படையை அனுப்பி ரூ.30,000 கோடியை ஜெயலலிதா பறிமுதல் செய்கிறார் என்றால் அவருக்கு தெரியாமலா அவரது அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பார்கள்? நத்தம் விஸ்வநாதன் விவகாரம் எல்லை மீறி சென்று விட்டதால் தம்மை சுத்தமானவர் என்று காட்டிக் கொள்வதற்காகத் தான் அவர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
தமிழக அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி ஆகியோர் ஊழல் மூலம் சேர்த்த பணத்தை அன்புநாதன் மூலம் முதலீடு செய்திருப்பதாகவும், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியும், அவரது மகனும் அன்புநாதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்க்கை வாழ்வதாகக் கூறிக் கொள்ளும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் இத்தனை ஊழல்களும் நடந்துள்ளன. இந்த ஊழல்களை தடுக்கத் தவறியதற்காகவும், அவற்றுக்கு துணை நின்றதற்காகவும் முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா உடனே விலக வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த 18 வகையான ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் கூடிய 209 பக்க புகார் மனுவை 17.02.2015 அன்று அப்போதைய தமிழக ஆளுனர் ரோசய்யா அவர்களிடம் நானும், பா.ம.க. நிர்வாகிகளும் நேரில் வழங்கினோம். ஆனால், தமது தேவைகள் ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்வதில் மட்டும் கவனம் செலுத்திய அவர், ஜெயலலிதா அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த முன்வரவில்லை.
ஆனால், ஊழல்கள் குறித்த உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்ற தத்துவத்தின்படி, நத்தம் விஸ்வநாதனின் ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புகள் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. இத்தகைய சூழலில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."என்றார்.