திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் திமுக பிரமுகர்கள் பஜனை பாடல்கள் பாடியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவுக்கு பின் தினந்தோறும் அவரின் சமாதிக்கு சென்று திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பலரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே என அவர்கள் வாத்தியங்கள் இசைத்து பாடல்களை பாடினர். அந்த வீடியோவில் ஒரு சினிமா குத்து பாடலை ரீமிக்ஸ் செய்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவமும் நடந்தது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பஜனை பாடல்களைப் பாடிய திமுகவினர்: செய்தி - ஓ.... இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்” என பதிவிலும்,
கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்!” என மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு திமுகவினர் கடுமையான எதிர்வினையை தெரிவித்து வருகின்றனர்.