தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதன்முறையாக இன்று மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் தலைமை அலுவலகம் ராகவேந்திரா மண்டபத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. அரசியலுக்கு வருவதால் அலுவலகத்திற்கு அடிக்கடி ஆட்கள் வந்து செல்வார்கள் என்பதால் அது மண்டப நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் அலுவலகத்தை மாற்ற இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
மேலும் கட்சி தொடங்கும் அறிவிப்பின்போது மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரையும் அழைக்காமல் ரஜினி செய்தியாளர் சந்திப்பு நடத்தியது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளதாக பேச்சு எழுந்த நிலையில் இன்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.