ரஜினியின் வீட்டின் முன்பு அவரின் ரசிகர்கள் தர்ணா போரட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 12ம் தேதியான இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர்கள் முதல் சில அரசியல் தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக, ரஜினிகாந்த் தனது பிறந்தநாளன்று தனது ரசிகர்களை சந்திப்பார். அதோடு, அவர் அரசியலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருப்பதால், இந்த பிறந்த நாளில் அவர் முக்கிய அறிவிப்பை அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
எனவே, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். ரஜினியின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கிடைக்காத காரணத்தினால், சாலையிலேயே கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்நிலையில், ரஜினிகாந்த் காலை 6 மணியளவில் வெளியூர் சென்றுவிட்டார். எனவே, ரசிகர்களை சந்திக்கமாட்டார் என காவல்துறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் எனக் கூறிய ரஜினி ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் அவருக்காக காத்திருந்தனர். ஆனால், ரஜினி அங்கு செல்லவில்லை என்பதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.