தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக் கட்சிகள் மட்டுமே நிலைத்து நிற்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு ‘மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டதால்தான் வேலூரில் அதிமுக 4 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது. எங்களது பணியை அதிகப்படுத்தியிருந்தால் திமுக இருக்கும் இடம் தெரியாமல் சென்றிருக்கும். இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து திமுக வாக்குகளை வாங்கியுள்ளது. திமுக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கட்சி. அதிமுக, மக்களுக்காக உழைக்கும் கட்சி.’எனத் தெரிவித்தார்.
கமல்ஹாசன் கட்சிப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது குறித்துக் கேட்கப்பட்ட போது ‘ கமல்ஹாசன் எல்லாம் வெற்றி பெறுவது குறித்து இன்னு 25 ஆண்டுகளுக்குப் பிறகே யோசிக்கவேண்டும். அவரெல்லாம் நகரத்துக் கட்சி. கிராமப்புறங்களில் அவருக்கு வேலையே இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆளும், திமுக வாழும். வேறு கட்சிகள் தமிழகத்திற்குள் வர முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.