தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி படகுகளை வாங்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஆண்டுதோறும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 111% அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முக்கியமாக தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அந்தந்த மாநிலங்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சென்னையில் தற்போது முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதால், மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாலும், புறநகர் பகுதிகளில் பருவமழை காலங்களில் வெள்ள நீர் சூழ்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி சொந்தமாக 36 படகுகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக மாதவரம் மற்றும் பெருங்குடி பகுதிகளுக்கு 2 படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவசர கால தேவை ஏற்பட்டால் மீனவர்களிடம் 80 படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K