சென்னை உள்பட தமிழக முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று திடீரென சென்னையில் 100 மில்லி மீட்டர் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைவியது. ஆனால் இன்று மீண்டும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திர காலத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் மழை பெய்யும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னையில் நேற்று பெய்தது சாதாரண வெப்பச்சலன இடி மழைதான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உருவான இடிமழை மேகங்கள் அப்படியே காற்றின் போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்தது.இந்த மழை மேகங்கள் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தூரம் பயணித்து சென்னைக்கு நேற்று முற்பகல் 11 மணியளவில் நகர்ந்து வந்த போது கடற்காற்றும் உள்ளே புகுந்ததால் வலுவடைந்தது. இதனால் சென்னையில் நேற்று இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.
சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கோடை மழை என்பதால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இன்று முதல் மழை குறைய தொடங்கும். வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் வெயில் உச்சம் தொடும். வருகிற 19-ந்தேதி தொடங்கும் வெயில் மே 5-ந்தேதி வரை அதிகமாக இருக்கும். மே 5-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ந்தேதி தொடங்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்புதான் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியது. தமிழகத்தில் இன்று முதல் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க கூடும்.வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் , ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்பட 22 மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை நிலவக்கூடும்.
தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 19, 20, 21 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கலாம்.வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.