தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் மூழ்கியதுடன், வேளாண் நிலங்களும் சேதமடைந்தன.
மழை பாதிப்புகள் குறித்து தற்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி “நேற்று முன்தினம் பெய்த மழையால் இருவர் உயிரிழந்துள்ளனர். 83 கால்நடைகள் இறந்துள்ள நிலையில், 538 வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பெய்த கனமழையால் 45,826 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.