சென்னையில் பல பகுதிகளில், நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது. இதை அடுத்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலை நிலவி வருவதாகவும், கிட்டத்தட்ட ஊட்டி போன்ற தட்பவெப்ப நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், பாண்டி பஜார், தியாகராய நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இன்றும் சூரியன் உதிக்கவில்லை என்பதும், ரம்யமான சூழ்நிலை காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில், தற்போது குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில், இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே தனியார் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள், இனிமேல் தமிழகத்தில் கோடை வெயில் இருக்காது; அவ்வப்போது மழை பெய்யும் என்று கூறியதை போலவே, தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.