காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் கன்னியாக்குமரி டூ காஷ்மீர் நடைபயணம் நாளை தொடங்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடா யாத்ரா (bharat jodo yatra)” என்ற நடைபயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை செப்டம்பர் 7ம் தேதி இந்த யாத்திரை கன்னியாக்குமரியில் இருந்து புறப்படுகிறது. இந்த நடைபயணம் குறித்த சிறப்பு தகவல்கள் சில…
இந்த பயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.
150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது.
இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி மற்றும் 118 பேருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் தயாராக உள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பின்னர் மாலை 3.30 தொடங்கி இரவு 7 மணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்படும். ஒரு நாளைக்கு 22 முதல் 26 கிலோமீட்டர் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடை பயணம் செல்லும் மாநிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாடவும், கலை நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.