பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், தேர்வு நடத்த திட்டமிட்ட பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மட்டும் நடத்துவது என்றும், 1 முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே தேர்ச்சி அளிக்கப்படும் என பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. அதில் அரசு அறிவித்தப்படி 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றும், மறைமுகமாக தேர்வு நடத்த முயலும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.