கோவையில் உள்ள தனியார் பள்ளி, நடப்பு கல்வி ஆண்டுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து, திடீரென சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி, நடப்பாண்டுடன் மூடப்படுவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் செய்தனர்.
இதன் காரணமாக, ஓசூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. "பள்ளியை திடீரென மூடினால் நாங்கள் என்ன செய்வது?" என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், "பள்ளியை தொடர்ந்து நடத்தும் வரை போராடுவோம்" என்று மாணவர்கள் கூறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலை மறியல் காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், அவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளியை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். ஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.