கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீரென சிறுத்தை புகுந்ததை அடுத்து, உடனடியாக பல்கலைக்கழகத்தில் இருந்த வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிறுத்தை நடமாடியதாக தெரியவந்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தற்போது, வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை தேடி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமராக்களை நிறுவி சிறுத்தையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறுத்தை பிடிக்கப்படும் வரை மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிறுத்தை பிடிபடும் வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.