மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் பலர் வாயை திறந்தாலே சர்ச்சை தான். அதிலும் முக்கியமாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சர்ச்சைக் கருத்தை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். மத்திய அரசின் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு பயன் பெறும் விதமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் வாஜ்பாய் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என கூறினார்.
இவர் இப்படி கூறியதும் கூட்டத்தில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இறந்துபோன மனிதர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் என கூறிய அமைச்சரின் அறிவை என்னவென்று சொல்வது. பட்ஜெட்டை யார் தாக்கல் செய்தார்கள் என்று கூட தெரியாமல் இவரெல்லாம் எப்படி அமைச்சராக இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.