அரசியல் களத்தில் மற்றொருவர் வந்தால் நடிகர் கமல்ஹாசனின் பரபரப்பு அடங்கிவிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இதனால், கடந்த மூன்ரு நாட்களாக ஊடகங்களில் அவரை பற்றிய செய்திகள் அதிகமாக வந்தன.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரமேலதா செய்தியாளர்களிடம் பேசிய போது “யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசனின் செயல்பாடுகள் பற்றி போகபோகத்தான் தெரியும். அவர் தாக்குபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்திருப்பார்கள். அதுபோல், மற்றொருவர் வரும்போது கமல்ஹாசனின் பரபரப்பு அடங்கிவிடும்” என அவர் கூறினார்.
அடுத்து அரசியலில் களம் இறங்கும் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் அவர் அப்படி கருத்து தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.