காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது குறித்து கேட்ட கேள்விக்கு பாஜக தலைவர் தமிழிசை கருத்து கூறியதை போலவே பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அதுபற்றி தெரியவில்லை என கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்துவிட்டு, தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்து நின்றாது தான் சர்ச்சைக்கு வித்திட்டது. அவரின் இந்த செயல்பாடு தமிழகத்தில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் இந்த பாஜகவினருக்கு மட்டும் இதுபற்றி தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. முன்னதாக இதுகுறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளிக்கையில் அதுபற்றி தனக்கு தெரியாது என கூறினார்.
அதேபோலவே இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்ததாக கூறுவது பற்றி தெரியவில்லை. அவர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். அதனால் இதில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார்.