சென்னையில் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பணத்தை இழந்த காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த இவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி விருந்தினர் மாளிகையில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைச் செய்துகொள்ள வேலுச்சாமி முயன்றார். இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் வேலுச்சாமி தற்கொலைக்கு முயன்றதற்கு ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.7 லட்சம் பணத்தை இழந்ததே காரணம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் ரம்மி மீதான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.