அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் இணைந்து கரூர் தொகுதி எம்எல்ஏ ஆனார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் சற்று முன்னர் திடீரென போலீசார் விசாரணை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கரூரில் உள்ள ராமேசுவரம்பட்டி என்ற பகுதியில் செந்தில்பாலாஜி வீடு உள்ளது. இன்று காலை செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்ற சென்னை போலீசார் அவரது வீட்டில் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்றபோது செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை என்பதால் அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
செந்தில் பாலாஜி கடந்த 2011-2016 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார்கள் வந்து இருப்பதாகவும் அந்த புகார் கொடுத்தும் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது
மேலும் செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை செய்ததாகவும் சோதனையில் ஏதாவது ஆவணங்கள் சிக்கியதா? என்பது குறித்த தகவலை போலீசார் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக எம்எல்ஏ வீட்டில் திடீரென போலீசார் சோதனை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது