காவல்துறை அதிகாரிகள் திருடர்களாக உள்ளனர்: ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!
காவல்துறை அதிகாரிகள் திருடர்களாக உள்ளனர்: ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!
இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் குட்கா சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றி பேச மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தடை செய்யப்பட்ட குட்காவை அவைக்கு கொண்டு வந்ததால் அவர் மீது சபாநாயகர் புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தடைசெய்யப்பட்ட பொருள் கிடைத்தால் அதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அதை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தது தவறு என ஸ்டலின் மீது குற்றச்சாட்டை வைத்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் ஆதரவுடனே குட்கா விற்பனை நடந்து வருகிறது. அதனை விளக்கவே அவைக்கு குட்காவை எடுத்து வந்தோம். காவல்துறை அதிகாரிகளே திருடர்களாக இருக்கும்போது குட்கா விற்பனையை காவல்துறையில் எப்படி புகார் அளிக்க முடியும் என கூறினார்.