Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதன் விவகாரம்: நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸார் விசாரணை

Advertiesment
மதன் விவகாரம்: நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸார் விசாரணை
, புதன், 22 ஜூன் 2016 (14:53 IST)
வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
 

 

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மதனை தேடும் முயற்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர் சிவா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வாரனாசி சென்றுள்ளனர். இவர்கள் தற்போது மதன் தங்கியிருந்த ஹோட்டல் அறையை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு மதன் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் ஹோட்டல் அறையில் இருந்தன.

இந்தநிலையில் மதன் மீது பண மோசடி செய்ததாக பல புகார்கள் குவிந்தன. இவரது பண மோசடியில் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கும் பங்கிருப்பதாக பேசப்பட்டது. இதையடுத்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மதன் மீது புகார் அளித்தார். அதில் எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி மதன் பண மோசடி செய்துள்ளார் என்றும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மதன் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததை அடுத்து மதனைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது அம்மா மற்றும் மனைவி போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் மதனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாயமான மதனின் நெருங்கிய நண்பரான நடிகர் ராகவா லாரன்ஸிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். லாரன்ஸ் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய இரு படங்களையும் மதன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டப்பகலில் பிரபல வழக்கறிஞர் வெட்டிக் கொலை