ஆவடி அருகே போலீஸாக நடித்து வழிப்பறி செய்த நபரை பிடிக்க காவலர்கள் காதலர்களாக நடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் எல்லையில் உள்ள 400 அடி பைபாஸ் சர்வீஸ் சாலையில் காதலர்களிடம் ஒரு நபர் போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சம்பவம் காவலர்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
அந்த பகுதியில் சந்தித்து பேசிக் கொள்ளும் காதலர்களிடம் தான் போலீஸ் என சொல்லிக் கொள்ளும் அந்த நபர், அவர்கள் தனியாக பேசிக் கொண்டிருப்பதை காவல் ஆய்வாளர் சிசிடிவி வழியாக பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி மிரட்டியுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து செல்போன், நகைகள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி ஒருவர் புகார் அளித்துள்ளனர். நூதன வழிப்பறி கொள்ளையனை பிடிக்க திட்டமிட்ட தனிப்படை காவலர்கள் தாங்களே காதலர்களாக மாறி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆங்காங்கே காவலர்களும் மறைந்திருந்துள்ளனர்.
அப்போது வழக்கம்போல அங்கு காதலர்களை கண்டதும், அவர்களிடம் சென்று மிரட்டல் விடுக்கும் தோனியில் போலி போலீஸ் பேசியுள்ளார். அப்போது காதலனாக நடித்துக் கொண்டிருந்த காவலர் அவனை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி தனது பைக்கில் தப்பி ஓடியுள்ளான்.
பூந்தமல்லி பைபாஸ் சாலையில் சென்ற போலி போலீஸை விரட்டி சென்ற போலீஸார் அவனை மடக்கி கைது செய்தனர். விசாரணையில் போலீஸாக நடித்து வழிப்பறி செய்தவர் பெயர் சிவராமன் என்றும், ஏற்கனவே பல பகுதிகளில் போலீஸாக நடித்து சிவராமன் வழிப்பறி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.