Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடகக் காதலர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ராமதாஸ் நீண்ட அறிக்கை !

Advertiesment
நாடகக் காதலர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ராமதாஸ் நீண்ட அறிக்கை !
, வியாழன், 14 மார்ச் 2019 (15:36 IST)
பொள்ளாச்சி சம்வத்தை முன்னிட்டு பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான இணக்கமின்மையே இது போன்ற தவறான பாதைகளில் பெண்கள் செல்லக் காரணமாக இருக்கின்றன என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நயவஞ்சக கும்பலால் காதல் ஆசை காட்டி வீழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்; எள் முனையளவும் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள் ஆவர்.

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வணங்கப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிகக் கொடூரமான முறையில் மிருகங்களைப் போன்று நடந்து கொண்டவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் ஆவர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கும், பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி பிரிவினர், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது.

இவ்வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ள சிபிஐ எந்த தொய்வுமின்றி, பாலியல் கொடூரர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, கூட்டுச் சதி செய்து கொடூரம் இழைத்த அவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை சிபிஐ விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பின்னணி குறித்து ஆராயும் போது, அவர்கள் அனைவரும் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்; சீரழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது தான் மிகவும் வேதனையளிக்கிறது. விழிப்புடன் இருக்க வேண்டியவர்கள் விளக்கை நம்பிய விட்டில் பூச்சிகளாய் கயவர்களை நம்பி சீரழிந்திருக்கின்றனர்.

அவர்கள் ஏற்கெனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சிகள் அவர்களின் மன அழுத்தத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும். இது மனக் காயங்களை மேலும் ரணமாக்குமே தவிர, மருந்து போடாது. எனவே, இந்த விஷயத்தில் காட்சி ஊடகங்களும், காணொலிகளை சமூக ஊடங்களில் பரப்புவோரும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அடையாளம் வெளிப்படாத அக்குழந்தைகளுக்கு குடும்பத்தினர் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

இத்தகைய கொடூரங்களுக்கு சம்பந்தப்பட்ட மனித மிருகங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் ஏமாளித்தனத்தையும் மட்டும் காரணம் காட்டி விட்டு, நாம் கடந்து போய் விட முடியாது. பொள்ளாச்சி கொடூரத்துக்கு சமுதாயமும் பொறுப்பேற்கத் தான் வேண்டும். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள நல்ல விஷயங்கள் குறித்தும், கெட்ட விஷயங்கள் குறித்தும் நமது அடுத்த தலைமுறையினருக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தவறியிருக்கிறோம். இது சமூகத்தின் தவறு.

காதல் என்ற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றில் 12.05.2011 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்தத் தீர்ப்பில், "எங்களின் பார்வையில் 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண்கள் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதை பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அதற்காக பின்னர் வருத்தப்படுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானதாகும்.

மனித நேயமும், மாண்புகளும், மனசாட்சியும், அறமும் மறித்துப் போய்விட்ட இன்றைய உலகில் அனைவரும், குறிப்பாக பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லும் பெண்கள் வீட்டிலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் வீடு திரும்புவது வரை கன்னிவெடிகளுக்கு நடுவில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. எதிர்பாராத விதமாக கன்னிவெடி மீது அடியெடுத்து வைத்தால் உயிரையே இழக்க நேரிடுவதைப் போன்று, பெண் குழந்தைகள் பருவ வயதில் தவறான முடிவெடுத்தால் வாழ்க்கையையே இழக்க வேண்டியிருக்கும் என்பதை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் நயவஞ்சகர்களால் எளிதில் வீழ்த்தப்படுவதற்கு இன்னொரு காரணம், அவர்களுக்கு தேவைப்படும் அன்பும், அரவணைப்பும் பெரும்பாலான பெற்றோர்களிடம் கிடைக்காதது தான். பொருள் தேடல், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நேரம் செலவிடுவதில்லை. இதனால் பல குழந்தைகளுக்கு தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனம் விட்டு பேசுவதற்கு கூட ஆளில்லை. இந்த இடைவெளியைத் தான் நயவஞ்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூரர்களால் நம்ப வைத்து சீரழிக்கப்பட்ட பெண்களில் பலரும் இத்தகைய சூழலில் வளர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற கூற்றுகளை மறுக்க முடியாது.

ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுடன் நேரத்தை செலவிடாமல் பணிக்காகவும், பொருளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் சித்திரங்களை வாங்க கண்களை விற்பவர்களாகத் தான் இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் அவற்றுக்கு சென்று திரும்பும் வழியில் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக இருந்தாலும் அதை தயக்கமின்றி குடும்பத்தினரிடம் கூறலாம்; அவர்கள் தீர்வு கூறுவர் என்று பெண்பிள்ளைகள் நம்பும் ஆரோக்கியமான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகளின் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பது செல்பேசிகள் ஆகும். அனைத்து தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்பேசிகள் தான். எனவே, அழிவின் ஆயுதமான செல்பேசிகள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இதை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரின் அறிவுரையாகக் கருதி அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பெண் குழந்தைகள் அவர்களின் பதின்வயதில் எந்த மனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. படிக்கும் வயதில் உயர்கல்வியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் தான் அவர்களின் இலக்காக இருக்க வேண்டும். அறிமுகமற்றவர்களின் அன்பைக்கூட சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டும். காதல் நாடகமாடி வாழ்க்கையை சீரழிக்க முயலும் வஞ்சகர்களிடம் விழிப்புடன் விலகியிருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறும் பெற்றோர்கள், ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாக நினைத்து மதிக்கும் மாண்பை ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் விதைக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்; பொது இடங்களில் சாதாரண உடையில் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். இந்த யோசனைகளை இப்போதாவது அரசு செயல்படுத்த வேண்டும்.
அதற்கெல்லாம் மேலாக, பெண்களை மயக்கும் கயமைப் போக்கை கைவிட்டு, மதிக்கும் போக்கை  நமது இளைஞர்களுக்கு கற்பிக்க சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களும் முன்வர வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.40,000 விற்கப்பட்ட பெண்களின் வீடியோ: பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்