சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நகர பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்கள் சுயதொழில் வாய்ப்பை பெறவும், பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.
இதன்படி, அரசு மானியமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கி, 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோவழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மொத்தம் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, முதல் கட்டமாக 250 பிங்க்ஆட்டோக்கள் சென்னையில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின்படி,
- ஆட்டோக்கள் முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்.
- பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும்.
- பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும்.
- ஆட்டோக்களில் ஜிபிஎஸ், வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் சாதனங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
இந்த பிங்க் ஆட்டோ திட்டம், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.