சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பிப்ரவரி மாதமே கோடை காலம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் 34 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், அதேபோல் கோவையில் சென்னையை விட அதிகமாக 35 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 32 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாகவும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகமாகி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.